Tuesday, July 13, 2010

மனம்+: கோபம்

நீங்கள் மிகவும் (அ) அடிக்கடி கோபப்படுபவரா?
உங்களுக்கு உண்மையாகவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா?

அப்படியென்றால் இந்த பதிவை படியுங்கள்...

கோபம் என்பது அழுகை, பயம், சந்தோசம் போன்ற ஒரு உணர்வுதான். எனவே கோபமே படக்கூடாது என சொல்வது தவறாகும். ஒரு குழந்தை தவறு செய்யும்போது அம்மா அதை அதட்டுவது ஒரு வகை கோபமே. அது தவறல்ல. ஆனால் அது குழந்தை பலமாக அடிக்கும் வகையில் வெளிப்படும்போது?

கோபம் ஏற்படுவதற்கு வயது வரம்பில்லை பெரியவர் முதல் சிறியவர் வரை கோபம் ஏற்படுகிறது.

கோபம் ஏன் ஏற்படுகிறது?



ஒரே வரியில் சொல்வதனால் நமக்கு பிடிக்காதவை நடக்கும்போது!

ஆம்! நமக்கு பிடிக்காதவற்றை மற்றவர் சொல்லும்போது/எழுதும்போது/கேட்கும்போது/படிக்கும்போது/செய்யும்போது.....
இப்படி பல சமயங்களில் நம் அதிருப்தியை, நம் எதிர்ப்பை கோபமாக காண்பிக்கிறோம்.

சரி! நாம் நம் கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்?
1. வெறுப்பு
2. பழிவாங்குதல்
3. அவர்களுக்கு பிடிக்காதவற்றை செய்தல்
4. தவறான விதத்தில் பேசுதல்/எழுதுதல்/செயல்படுதல்
5. அடித்தல்/வன்முறை
6. முக உடல் அசைவுகளில் அதை காண்பித்தல் (பாடிலாங்குவேஜ்)
இதுபோன்று பல விதங்களில் கோபத்தை காண்பிக்கிறோம். ஒருவரை பார்ப்பதை, அவரிடம் பேசுவதை தவிர்த்தல், தங்களது பொறுப்புகளை வேண்டுமென்றே செய்யாமல் இருப்பது, மற்றவர்களை குற்றம் சாட்டுவது, தங்களையே குற்றம் சாட்டி கொள்வது இப்படி பலவிதங்களில் நாம் கோபத்தை காண்பிக்கிறோம்.

இவை அதிகமாகும் போது பலவித பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதை தெரிந்துகொள்ளும் முன் கோபப்படும்போது நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என பார்ப்போமா?

1. இதய துடிப்பு அதிகரிக்கிறது.
2. இரத்த அழுத்தம் அதிகமாகிறது
3. சில நாளமில்லா சுரப்பிகள் வேகமாக சுரக்கின்றன.
4. தசைகள் வேகமாக இயங்குகின்றன.
5. மூச்சு விடுதல் வேகமாகிறது.
6. மூளையில் நரம்பு செயல்பாடு அதிகரிக்கிறது.
7. உடல் சமநிலை பாதிக்கப்படுகிறது.

கோபப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகள்:


நீங்கள் கோபமாக இருக்கும்போது எப்போதாவது உங்கள் இதயத்தை தொட்டு பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் அதை செய்யுங்கள்... (இதனால் கோபம் சிறிது குறைய வாய்ப்புள்ளது). கோபப்படும்போது இதயம் வேகமாக துடிப்பதால், அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கொழுப்பு/சர்க்கரை வியாதி இருந்தால் அவ்வளவுதான்!

கோபப்படும்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால் மேற்கண்ட பிரச்சினை இரட்டிப்பாகிறது.
கோபப்படும்போது நம் உடலின் சமச்சீர் தன்மை சீர்குலைகிறது.

சரி இவ்வளவுதானா! என்றால் இல்லை...
சிலர் கோபமாக இருக்கும்போது.. சிகரெட், மது போன்றவற்றை தேடி செல்கின்றனர். மற்றவர்களிடமிருந்து விலகி இருக்கின்றனர். சிலர் நாள்பட்ட கோபத்தை டிவி, கம்ப்யூட்டர் முன் நேரத்தை கழிப்பதன் மூலம் மறக்கப் பார்க்கின்றனர்.

இவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பலப்பல..

கோபம் வேலை சூழலை/வியாபாரத்தை பாதிக்கிறது.
கோபம் திருமண வாழ்வை/குடும்ப அமைதியை பாதிக்கிறது.
கோபம் சமூக/குடும்ப உறவுகளை பாதிக்கிறது
கோபம் உடல்நலத்தை பாதிக்கிறது.
கோபம் உங்கள் மன நலத்தை பாதிக்கிறது.

சரி கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள்:

சிலர் கோபம் வரும்போது 1 முதல் 10 வரை எண்ணச் சொல்வார்கள். ஆனால் இது பலருக்கு பலனளிப்பதில்லை.
குறிப்பிட்ட விஷயங்களிலோ, அல்லது குறிப்பிட்ட நபரிடமோ உங்களுக்கு அடிக்கடி கோபம் ஏற்பட்டால்... அது ஏன் ஏற்படுகிறது என மூல காரணத்தை ஆராயுங்கள்.

உதாரணத்திற்கு ஒரு நண்பர் நீங்கள் அடிக்கடி பழகும் நபர் அவர். அவர் மீது அடிக்கடி கோபம் வருகிறது என்றால், அவர் உங்களுக்கு பிடிக்காத எதையோ அடிக்கடி செய்கிறார். அது என்ன என்று முதலில் கண்டுபிடியுங்கள். பிறகு அவர் அதை ஏன் செய்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் கோபப்படுவது நியாயம்தானா என அறியுங்கள். ஒருவேளை அவர் வேண்டுமென்று செய்தால், அவரிடம் உங்கள் நிலையை விளக்கி மறுபடியும் அதுபோல் செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள். அதை மீறி அவர் மீண்டும் அதை செய்தால், அவரிடம் பழகுவதை கைவிடுங்கள்.

ஒருவேளை நீங்கள் கோபப்படுவது நியாயமாக இல்லையென்றாலோ, அல்லது தவறு உங்கள் மீது இருந்தாலோ உங்களை திருத்திக் கொள்ள முயற்சியுங்கள்.

நீங்கள் கோபப்பட்ட சூழ்நிலையை மனதில் நினைத்து பாருங்கள். அதில் நீங்கள் உங்கள் எதிராளியில் இடத்தில் இருந்து அவரின் உணர்வுகளை நினைத்து பாருங்கள்.

கோபம் வரும்போது, ஒன்று, இரண்டு என எண்ணுவதற்கு பதிலாக, ஒரு சாக்லேட், இரண்டு சாக்லேட் என பத்து வரை எண்ணுங்கள். இங்கே சாக்லெட் என்பதற்கு பதிலாக ஐஸ்கிரீம், லட்டு, கப்பல், ஜன்னல் போன்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

கோபம் வரும்போது நன்றாக எவ்வளவு தூரம் மூச்சு இழுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மூச்சு இழுத்து  சிறிது அடக்கிவைத்து(1 முதல் 8 வரை எண்ணிய பிறகு) பிறகு மெதுவாக வெளியே விடவும்.

கோபம் வரும்போது, உங்களுக்கு பிடித்தை நினைத்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு பிடித்த உணவு, சினிமா, நடிகர், நிகழ்ச்சி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அது உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்க வேண்டும்.

கோபம் வரும்போது இவற்றை செய்வது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம், ஏன்! செய்ய வேண்டும் என்ற ஞாபகமே வராமல் கூட போகலாம். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் கோபம் குறையும்.

தியானம், யோகா போன்றவையும் கோபத்தை கட்டுப்படுத்தும். இவற்றையும் முயற்சிக்கலாம்.


சிலருக்கு கோபப்பட்டு சத்தம்போட்ட பிறகோ அல்லது வன்முறை செயலுக்கு(அடித்தல்/காயப்படுத்துதல்) பிறகோ தலைவலி/மயக்கம் போன்றவை ஏற்படலாம். இவர்கள் தொடர்ந்து கோபப்பட்டால் இவர்களின் உடல்நலம் சீக்கிரம் மோசமாகலாம்.

இங்கே கூறியுள்ள வழிமுறைகளை பரிசோதித்து பாருங்கள். நிச்சயம் பலனளிக்கும்.



டைம்பாஸ்

ஜோக் 1:
ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.

அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”

அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள்.

அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள்.
அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”
அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் அந்த பெண்ணிடம் கிளி மறுபடியும் அப்படி சொல்லாது என வாக்குறுதி தந்தார்.

அவள் மாலை வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,”ஏ, பெண்ணே”

அவள் ”என்ன” என்றாள்

கிளி சொன்னது, “உனக்கே தெரியும்"
===========================
ஜோக் 2:

ஒருவரின் குடும்ப டாக்டர் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் கூறினார். ”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.”

”அடடா, கெட்ட செய்தி என்ன?”

”உங்களால இருபத்து நான்குமணி நேரம்தான் உயிரோட இருக்க முடியும்.”

”அய்யயோ! சரி, மோசமான செய்தி என்ன?”

”இந்த விசயத்தை நேற்றிலிருந்து உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துகிட்டிருக்கேன்.”
===========================
ஜோக் 3:
ஒருவர் வக்கீலிடம் சென்றார். பிறகு வக்கீலிடம் கேட்டார்.
”உங்களோட பீஸ்(கட்டணம்) எவ்வளவு?”

வக்கீல் சொன்னார். “மூன்று கேள்விகளுக்கு ஐநூறு ரூபாய்?”

அவர் கேட்டார், ”ரொம்ப அதிகமா இல்ல?”

வக்கீல் சொன்னார், “ஆமாம். சரி, உங்க மூன்றாவது கேள்வி என்ன?”

6 comments:

  1. நல்ல பதிவு, ஜோக்ஸ். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ அருண் பிரசாத்
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. நல்ல கருத்து அருமையான முயற்சி :-)

    ReplyDelete
  4. //சிங்கக்குட்டி said... //
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  5. உங்கள் இடுகைகள் அனைத்தும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  6. //சுதீர்.ஜி.என் said...//
    மிக்க நன்றி சார்!

    ReplyDelete