Thursday, July 29, 2010

உடலை அறிவோம் - கண் (பாகம் 1)

கண் என்பது நம் பார்வைக்கான உறுப்பு. இது மண்டையோட்டில் கருக்கோளக் குழிக்குள் அமைந்துள்ளது. கண் புருவங்கள் கண்ணிற்கு நிழலை அளிக்கின்றன. மேலும் இவை வியர்வை கண்ணுக்குள் சென்று எரிச்சலை ஏற்படுத்தாதவாறு தடுக்கின்றன. கண் இமைகளும், இமை முடிகளும் கண்ணுக்குள் தூசி எதுவும் விழாமல் தடுக்கின்றன. கண் இமைக்கு செயலால் கண்ணீர் கண்ணின் மேல் பகுதியில் பரவி உராய்வு தடுக்கப்படுகிறது. இந்த கண்ணீர் உராய்வினை மட்டும் தடுக்கவில்லை, இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளை கொள்ளும் நொதிகளும் உப்புகளும் உள்ளன.

கண் என்பது இரண்டு திரவங்கள் நிரப்பட்ட ஒரு கோளம் ஆகும். ஆறுதசைகள் அதை இயக்குகின்றன. அவை குறுக்கும் சாய்வுமான தசைகள். கண்ணின் சுவர் மூன்று அடுக்குகளால் ஆனது. வெளிப்பகுதி விழிவெண்படலம்(ஸ்கிளீரா) என அழைக்கப்படுகிறது. இது வெள்ளை நிறத்தினால் ஆனது. இதனாலேயே நம் கண் வெண்மையாக காணப்படுகிறது. கார்னியா அல்லது கருவிழி எனப்படுவது இதன் ஒளி ஊடுருவும் தன்மையுள்ள முன்பகுதியாகும். இரண்டாவது அடுக்கு காராய்டு ஆகும். இதில் பல இரத்தக் குழாய்களும் நிறமிகளும் அடங்கியுள்ளன. இது கருப்பு நிறத்தில் ஒளி ஊடுருவாத தன்மையுடன் இருக்கும். மூன்றாவது மற்றும் உள்பக்க அடுக்கான சிலியரி தசை பகுதியில் பல மென் தசைகள் லென்சை ஒரு நிலையில் தாங்கி பிடித்துள்ளன. விழித்திரைப் படலம் என்பது பாவையை சுற்றி அமைந்துள்ள நிறமுள்ள தசையாகும். இது பாவைக்குள் நுழையும் ஒளியின் விட்ட அளவை கட்டுப்படுத்தும். நாம் இருட்டறைக்குள் செல்லும்போது இது திறந்து அதிக வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கிறது. பலமான சூரிய ஒளியில் நாம் இருக்கும்போது சுருங்கி வெளிச்சத்த குறைக்கிறது.

கண்ணின் உள்பக்கம் இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முன்பக்க அறையில் அக்யூவஸ் ஹியூமர் என்னும் திரவம் உள்ளது. இது ஒளியை விலகச் செய்கிறது, கண்ணுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது, மேலும் கண்ணுக்குள் உள்ள அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இது சிலியரி தசையால் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்பக்க அறையில் விட்ரியஸ் ஹியூமர் என்னும் திரவம் உள்ளது. இதுவும் கண்ணுக்குள் உள்ள அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, ஒளியை விலகச் செய்கிறது, மேலும் ரெடினாவையும் லென்சையும் தாங்குகிறது. ரெடினா என்பது கண்ணின் உட்பக்க அடுக்காகும் இதில் ஒளி உணர் செல்கள் உள்ளன. இதில் உள்ள நிறமிகள் அடுக்கு ஒளி திரும்ப பிரதிபலிக்காதவாறு பார்த்துக்கொள்கின்றன.

இந்த ரெடினாவில் கூம்புகள் மற்றும் குச்சிகள் எனப்படும் நரம்பு செல்களின் அடுக்கு உள்ளது. குச்சிகள் மங்கால வெளிச்சத்திற்கும், கூம்புகள் நிறங்களை கண்டறியவும் பயன்படுகின்றன. இந்த கூம்புகளின் கலவையாலேயே நம்மால் அனைத்து நிறங்களையும் கண்டறிய முடிகிறது. இந்த செல்கள் இணைந்து ஆப்டிக் எனப்படும் பார்வை நரம்பை உண்டாக்குகின்றன. இந்நரம்பு மண்டையோட்டின் கருக்கோள குழியில் பின்புறத்தில் உள்ள ஒரு துளைவழியாக மூளையின் பின் பக்கமாக சென்று மூளையுடன் இணைகின்றன.ரெடினாவின் மையத்தில் ஒரு மஞ்சள் நிறப் புள்ளி உள்ளது. அதன் மையத்தில் உள்ள பள்ளம் ஃபோவியா செண்ட்ராலிஸ் என அழைக்கப்படுகிறது இந்த இடமே கூர்மையான பார்வையை உண்டாக்கும் இடமாகும். அதற்கு பக்த்தில் ஆப்டிக் நரம்பு செல்கிறது. ரெடினாவை உற்பத்தி செய்ய விட்டமின் ஏ தேவை. இதனாலேயே விட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. அவர்களால் வெளிச்சம் குறைவான நேரத்தில் பார்க்க முடியாது.

அகொமடேஷன்
இளைஞர்களுக்கு லென்ஸ் உறுதியான ஒளி ஊடுருவும் திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும். லென்ஸ் தளர்ந்த நிலையில் இருக்கும்போது அது ஏறக்குறைய கோளவடிவில் இருக்கும். படத்தில் காண்பித்துள்ளவாரூ சுமார் 70 நிலைநிறுத்தும் தசைநார்கள் லென்சை கருக்கோளத்திற்க்கு சற்று வெளியே நிற்கும்படி பிடித்துக் கொள்கின்றன. மேலும் பல தசைநார்களும் சிலியரி தசைகளும் லென்சை சரியான நிலையில் நிலைநிறுத்துகின்றன.

2 comments:

  1. தகவலை அறிய தந்தமைக்கு நன்றி

    www.tamilthottam.in

    ReplyDelete