“என் எதிரி. அவனுக்கு எனக்கும் என்ன உறவு என்பதை பற்றியெல்லாம் கேட்காதே”
ஜான் அமைதியாக இருந்தான்.
சரவணன் ஒரு ஃபோட்டோவை காண்பித்தார். “இதுதான் ரவிச்சந்திரக் குமார்.”
பாஸ்கரை போலவே மிடுக்காக இருந்தார், ஆனால் பணக்காரக் களை மிக அதிகமாக தெரிந்தது.
”ஜான், இந்த ரவிச்சந்திர குமாருடைய மகனுக்கு நாளை திருமணம். திருமணம் முடிந்தவுடன் ஹோட்டல் ஜான்சியில் ரிஷப்சன். நீ அங்கே போக வேண்டும். இந்த ரவிச்சந்திர குமாரை கண்காணிக்க வேண்டும். அவன் ஒருவரிடம் ஒரு சூட்கேஸை வாங்குவான். நீ எப்படியாவது அதில் இருக்கும் இரண்டு சிறிய டைரிகளை எடுத்து வர வேண்டும். முடியுமா?”
ஜானுக்கு மலைப்பாக இருந்தது. இருந்தாலும் இது அவனை நம்பி ஒருவர் கேட்கும் செயல். அதனால் அவனுக்கு ஒரு நம்பிக்கை வந்தது.
“நிச்சயமாக செய்துமுடிப்பேன் சார்” என்றான் ஜான்.
***********************************
ஹோட்டல் ஜான்சி.அந்த மாலை நேரத்தில் காரிலிருந்து இறங்கினான், ஜான். காரில் பாஸ்கரும், சரவணனும் உட்கார்ந்திருந்தனர். பாஸ்கர் சொன்னார்,
“இப்போ மணி ஆறு முப்பது எப்படியும் ஏழு, எட்டு மணிக்குள்ளே கூட்டம் குறைஞ்சிடும். நீ எங்கேயாவது உட்கார்ந்துக்கோ அவனை ரகசியமா கண்கானிச்சிகிட்டே இரு. ஆனா நீ பார்க்கிறது அவனுக்கு தெரியக்கூடாது. அவன் கிட்ட அந்த சூட்கேஸ் வந்தவுடனே நீ சரியான நேரம் பார்த்து அந்த டைரிகளை எடுத்து வந்துடு”
”நாங்க இங்கே காரிலேயே காத்திருக்கிறோம்.”
ஜான் உள்ளே நுழைந்தான். அந்த ஃபோட்டோவில் இருந்த மனிதரை தேடினான்.
அதோ ஒரு கூட்டம் அங்கே நடுவில் நிற்பவர் தானே அவர். ஆமாம் அவர்தான். அவருக்கு அருகில் யார் ஒரு பெண். மிகவும் அமைதியாக இருக்கிறாளே. நன்றாக அலங்கரித்திருக்கிறாள். ஒருவன் அவள் அருகில் வந்து நின்றான். அவளிடம் கிசுகிசுப்பாக பேசினான். அவள் சிரித்தாள். அப்போது அந்த பெரிய மனிதரின் அருகில் ஒருவர் வந்தார் அவர் அவனையும் அவளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஜானுக்கு புரிந்தது. ரவிச்சந்திரகுமார், அவரின் மகனும் மருமகளும் அவர்கள்.
No comments:
Post a Comment