Saturday, July 31, 2010

கடைசி வாய்ப்பு - 5

ஜான் அவரைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

ஆனால் சிலவற்றை புரிந்து கொண்டான். அவர் இப்பொழுது ஓரளவு பணக்காரர். அவருக்கென்று எந்த உறவுகளும் இல்லை. இருக்கும் ஒரே உறவு சரவணன் - அவரின் நெருங்கிய நண்பர். அவருக்கு ஒரு எதிரி உண்டு. அது யாரென்று தெரியாது. ஆனால் அதற்காகதான் அந்த எதிரி சம்பந்தபட்ட வேலைக்காகத்தான் தன்னை நியமித்துள்ளார்.
ஜான் வந்த நாள் அவனிடம் எந்த வேலையையும் பாஸ்கர் சொல்லவில்லை.

ஆனால் மறுநாள் அவனை குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் குறிப்பிட்ட பேருந்தில் ஏறச் சொன்னார். அவனும் ஏறினான். இதுவரை பஸ்ஸில் பிக்பாக்கெட் அடிப்பதற்காக மட்டுமே ஏறிய ஜான் முதல்முறையாக வேறொரு வேலைக்காக ஏறினான்.

பாஸ்கர் அடையாளம் சொல்லியிருந்தார். நீல நிற உடை. வழுக்கை தலை. டை உண்டு. கண்ணாடி அணிந்திருப்பார். ஜான் பஸ்ஸில் தேடினான். அதே அடையாளங்களோடு ஒருவர் நாலைந்து இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார்.

அவர் அருகில் உட்கார இடமில்லை. சிறிது நேரம் கழித்து இடம் கிடைத்தவுடன் ஜான் உட்கார்ந்தான். கொஞ்சம் நேரம் ஒன்றும் நடக்கவில்லை. அதுவரை அவனைப் பார்க்காத அந்த மனிதர் திடீரென அவனைப் பார்க்காமலேயே ஒரு பையை தந்தார். சிறிய பை. ஜான் ஆச்சரியமாக வாங்கிக் கொண்டான்.

பாஸ்கர் சொல்லியபடி அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு ஆட்டோ பிடித்து பாஸ்கரிடம் வந்தான். 

பாஸ்கர் அதை வாங்கிக் கொண்டார். அதில் ஒரு சிடி இருந்தது. இதே போல் மூன்றாம் நாளும் அவன் செய்தான்.

ஜான் வந்து சரியாக ஒருவாரம் கழித்து பாஸ்கர் சொன்னார். “ஜான் நாளை நீ இரண்டு டைரிகளை திருடி வர வேண்டும்.”

”யாரிடமிருந்து”

“ரவிச்சந்திர குமாரிடமிருந்து”

No comments:

Post a Comment