Saturday, November 27, 2010

சமகால கல்வி - Survival of the fittest

சமகால கல்வி முறை எப்படி இருக்கிறது என்பது பற்றி எழுத சொன்ன தேவா அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்கள், கேள்விப்படும் கருத்துக்கள் இவற்றிலிருந்தே தங்கள் முடிவுகள், தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அப்படி பார்த்தால் என் அனுபவங்களிலிருந்து சமகால கல்வி முறை சரியில்லை என்றே சொல்லலாம்.

சிறுவர்களின் மூளை களிமண் போன்றது அதை நாம் முறையாக கையாண்டால் எளிதாக நல்லவற்றை பதிய வைக்கலாம். ஆனால் பலமுறை பெற்றோர்களும், ஆசிரியர்களுமே, மற்றவர்களுமே சிறுவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ தவறான வழிகாட்டிகளாகிவிடுகிறோம். கல்வி என்பது ஒரு மனிதனை உருவாக்கும், பண்படுத்தும் ஒன்று. அது முறையாக கிடைக்காத போது மனிதனும் முழுமையற்ற சீரற்றவனாகிறான்.

இன்று பள்ளியில் படிக்கும் பலருக்கும் தங்கள் தாய்மொழியே சரியாக தெரிவதில்லை. தமிழ் எழுத்துக்கள் எத்தனை என்று தெரியாதவர்களும் இங்கே இருக்கிறார்கள். உச்சரிப்பு என்பது மிக மோசமாக உள்ளது. ஆங்கில மீடியம் படிப்பவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். தமிழ்வழியில் பத்தாவது வரை படித்த மாணவர்களுக்கு ஒரு செய்திதாளை கூட தெளிவாக படிக்க முடிவதில்லை. காரணம் ஆசிரியர்கள்தான் என்பேன். இது அடிப்படையாக ஆரம்பகால பள்ளி நாட்களில் கற்க வேண்டியவை. ஆனால் அந்த சமயத்தில் சரியாக சொல்லி தராவிட்டால் இந்நிலை ஏற்படுகிறது. ஆர்வமாக தானாக கற்காத மாணவர்கள் நிலை இதுதான்.

தற்கால பாடத்திட்டங்கள் வாழ்க்கைக்கு தேவையானவற்றை போதிப்பதில்லை என பலரும் சொல்கிறார்கள். ஒரு மனிதன் பல்வேறு சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பாடத்திட்டங்கள் போதிப்பதில்லை. குறிப்பாக தனிமனித ஒழுக்கம் பற்றி பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக தெரிவதில்லை. இதனை போதிக்க வேண்டியது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பொறுப்பாக இருப்பதால், இது ஒழுங்காக நடக்காவிட்டால் மாணவரின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. பள்ளிகளில் நீதி நெறிக்கென்னு ஒரு பாடவேளை இருக்கும். அதில் எத்தனை பள்ளிகளில் பாடம் நடத்தப்படுகிறது. பெரும்பாலான மாணவர்களுக்கு அந்த பாடவேளை எதற்கென்றே தெரியாது!

பாலுறவு, சுய சுகாதாரம், விடலைப் பருவத்தில் ஏற்படும் உடல், மனரீதியான மாற்றங்கள் இது பற்றியல்லாம் யாருக்கும் முழுமையாக தெரிவதில்லை. இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பெற்றோர்களோ, ஆசிரியர்களோ சரியாக சிந்திப்பதில்லை. என் அனுபவத்திலேயே பாலுறுப்புகள் பற்றிய அறிவியல் பாடத்தை கூட நடத்தாத ஆசிரியர்களை பார்த்துள்ளேன். இது பற்றி தெரியாதவர்கள் சில சமயம் ஆர்வத்தால் தவறான வழிகளுக்கு செல்வது இங்கே நடக்கின்றது. அடிப்படை மருத்துவ விஷயங்கள், சுகாதார விஷயங்கள் போன்றவை படிக்கின்ற புத்தகத்தில் இருந்தாலும் அதை மாணவர்கள் அறியாத நிலை ஏற்பட்டால் அது மாணவர்களின் குற்றம் மட்டும் என ஒதுக்கி விட முடியாது!

எப்போதுமே படிக்கும் காலத்தில் எல்லோருக்கும் கல்வி ஒரு சுமை போலத் தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி பாடம் மீதான ஈடுபாடு என்பது எப்போதுமே மாணவர்களுக்கு இருக்க வேண்டும். அப்படி ஈடுபாடே இல்லாமல் இருந்தால் அவர்களின் கல்வி வீண்தான்! பெரும்பாலோனோர் பரீட்சை சமயத்தில்தான் முனைப்பாக படிக்கவே செய்வார்கள். அதுவும் பொதுத் தேர்வு உள்ள 10ஆம், 12ஆம் வகுப்பு போன்ற வகுப்புகளில்தான் தீவிரமாக படிப்பார்கள். இப்போது பொதுத் தேர்வை சில பாடதிட்டங்களில்/பள்ளிகளில் நிறுத்தி விடுவதால் மாணவர்கள் எப்படியும் தேர்ச்சியடைந்து விடலாம் என சாதாரணமாக கூட இருக்கலாம்.

கல்வி திட்டம் மட்டுமில்லாமல் பல பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களே இருப்பதில்லை. நான் +1, +2 படிக்கும்பொழுது எனக்கு கணிதம் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட பின், முழு ஆண்டு பரீட்சை நெருங்கும் சமயத்தில் அப்பாடங்களுக்கு வேறு பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் வந்து வாரம் இருமுறை பாடம் எடுத்தார். பலர் அந்த ஆண்டு எங்கள் பள்ளியில் கணிதத்தில் தோல்வியடைந்தனர். இத்தனைக்கும் அது ஒரு அரசு பள்ளி. அரசு பள்ளியிலேயே இந்நிலை என்றால் தனியார் பள்ளிகளில்???! எத்தனையோ மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாததால் அந்தந்த பாடங்களை படிக்காமல்/புரியாமல் கடந்து செல்கின்றனர்.

பலர் தனியார் பள்ளிகளை தேடிச் சென்று தங்கள் பிள்ளைகளை சேர்க்க காரணம் அங்கே நல்ல கல்வி கிடைக்கும் என்றுதான், ஆனால் பல தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் எட்டாத உயரத்தில் உள்ளது. அதையும் மீறி கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் குடும்பங்களும் உண்டு. என்னை பொறுத்த வரை நல்ல கல்வி கிடைப்பது ஆசிரியர்களை பொறுத்தது! அது அரசுப் பள்ளியிலும் கிடைக்கலாம், தனியார் பள்ளியிலும் கிடைக்கலாம். நான் படித்த அரசு பள்ளியிலேயே நன்றாக புரியும்படியும், படிக்கின்றவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும்படியும் பாடம் நடத்து ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதேபோல் கட்டணம் அதிகமாக வாங்கிக் கொண்டு பேருக்கு பள்ளி நடத்தும் தனியார் பள்ளிகளும் இங்குள்ளன.

சில பள்ளிகள் தங்கள் பள்ளியின் மதிப்பை உயர்த்தவும், தேர்ச்சியடைபவர்களின் எண்ணிக்கை உயர்த்தவும், பிள்ளைகளை படி படி என்றும் கடுமையாக தொந்தரவு செய்யும் நிலையும் உள்ளது. பரீட்சை சமயங்களில் இரவு முழுதும்/விடுமுறை நாட்களில் கூட ஸ்பெஷல் கிளாஸ் நடத்தப்படுகின்றன. இது மாணவர்களின் மனம் மற்றும் உடல்நிலை இரண்டையுமே பாதிக்கும். மேலும் படிப்பின் மீது ஒரு வெறுப்பு கூட ஏற்படலாம். அதேபோல் சில பள்ளிகளில் தண்டனைகளும் கடுமையாக உள்ளன. உடல்ரீதியாக மாணவர்களுக்கு தண்டனை தருவது ஒருபுறமிருக்க ‘லேட்டா வந்தா ஃபைன், யூனிஃபார்ம் சரியில்லனா ஃபைன்’ என ஒவ்வொன்றிற்கும் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளும் உள்ளன.

ஒவ்வொரு மாணவருக்கு தங்கள் எதிர்காலம் பற்றிய முடிவெடுக்க வழிகாட்ட உதவ வேண்டியது பள்ளியின் கடமையாகும். பள்ளியில் படிக்கும் பல பேரிடம் நீ அடுத்து என்ன படிக்கலாம் என்றிருக்கிறாய் என்ற கேள்வியை கேட்டால், தெரியலை அப்போ பார்த்துக்கலாம் என்பார்கள். இவர்களில் பெரும்பாலோனரின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும். இது அவர்களின் தனிப்பட்ட பண்பை சார்ந்தது இதில் பள்ளியின் பங்கில்லை என நீங்கள் நினைக்கலாம் ஆனால் ஒரு நல்ல கல்வி மாணவரை செப்பனிட வேண்டும் அவரால் எதிர்காலம் பற்றி கூட முடிவெடுக்க அக்கல்வி உதவா விட்டால், அதனால் பயன் என்ன?

பள்ளிக் கல்வி மட்டுமல்ல கல்லூரி கல்வியும் இப்படித்தான்! உண்மையில் அதன் நிலை இதைவிட மோசமாக உள்ளது! பல கல்லூரிகளில் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் பலருக்கு விரும்பிய பாடங்கள் எட்டாக் கனியாகவே போய் விடுகின்றன. ஏதேதோ கட்டணங்கள் என பெரிய பட்டியலே போட்டு கட்டணங்கள் வாங்குவது போதாதென்று நன்கொடை என்ற பெயரிலும் வசூலிக்கிறார்கள். கட்டணம்தான் எக்கசக்கம், கல்வி தரமாக அமைகிறதா என்றால் அதுவுமில்லை. கணிப்பொறி பொறியியல் கல்லூரியில் கணிப்பொறிக்கள் மட்டுமே உள்ளன. அங்கே ஒழுங்காக பாடம் சொல்லி தரப்படுவதில்லை. (இது என் நண்பனுக்கு நடந்தது). பெரும்பாலும் கல்லூரி என்றாலே பள்ளி போன்று பாடம் நடத்த மாட்டார்கள் என்றாலும் இருப்பதையும் ஒழுங்காக செய்யாவிட்டால் மாணவர்களின் நிலை என்ன? எத்தனை பேருக்கு துறை சார்ந்த அறிவு போதுமான அளவு இருக்கின்றது? கல்லூரியில் தானாக ஆர்வம் எடுத்து படிப்பவர்கள் மட்டுமே சமாளித்து வெளிவர முடிகிறது. கல்லூரி முடித்து வெளிவரும் பலரிடமும் சான்றிதழ்கள் மட்டுமே உள்ளன, ஆனால் Knowledge?

இந்த கல்வி முறையில் நன்மைகளே இல்லையா என்றால், இருக்கிறது!!! இந்தியா கல்வி முறையில் பெரும் வளர்ச்சியடைந்திருப்பது உண்மைதான்! இக்காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது! கல்வி கற்க பல வசதிகள், வாய்ப்புகள் உள்ளன! நவீன வசதிகள் மாணவர்கள் எளிமையாக பாடங்களை கற்க வழிவகை செய்கின்றதான்! அடிப்படைக் கல்வி இலவசம் என்பதால் பலரால் பள்ளிக் கல்வியை ஓரளவுக்கு இலவசமாக பெற முடிகிறது. மேலும் கணிணி வழி கல்வி, தொலைக்காட்சி வழி கல்வி, கருத்தரங்குகள், என நவீன வசதிகள் பலவற்றின் மூலம் மாணவர்கள் இங்கு பல விஷயங்களை தெளிவாக கற்க வாய்ப்புகள் உள்ளன. இதெல்லாம் நல்ல விஷயமாக தோன்றினாலும் எல்லாமே முழுமையாக நடப்பது அரசின் கையில்தானே உள்ளது!

அரசு கல்வித் துறையை தன் கட்டுப்பாட்டில் ஒழுங்காக வைத்து முறையாக செயல்படுத்துமானால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டணங்கள் அதிகமென்ற பேச்சே வராது! ஆசிரியர் பற்றாக்குறையும் இருக்காது! மேலும் பல வாய்ப்புகள் வசதிகளை முழுமையாக செய்யுமானால் பலருக்கும் கல்வியின் பலன் அதிகமாக கிடைக்கும். அரசு எல்லா கல்வி சாலைகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து தவறு நடக்கும்பட்சத்தில் கடுமையான தண்டனை அளிக்குமானால் கல்வி துறைகள் செம்மையாக இருக்கும். ஆனால் அப்படி இல்லையே!!! அரசாங்கத்திலும் பணத்திற்காக வளைந்து கொடுப்பவர்கள் இருக்கின்றார்கள். இல்லையென்றால் Paper Chasing என்ற பெயரில் காசு வாங்கி கொண்டு பரீட்சையில் தேர்ச்சியடையச் செய்வது நிகழுமா?

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் இக்கல்வி முறை சரியில்லை என கூறக் ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த விஷயத்தை வேறொரு நாளில் வலையுலக நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள எண்ணியிருந்தேன். இருப்பினும் இந்த கட்டுரைக்கு அது பொருத்தமானதென எண்ணி சொல்கிறேன். நான் சிறு வயது முதலே மருத்துவ படிப்பு படிக்க ஆசைப்பட்டவன். +2 முடித்தபின் எனக்கு பிசியோதெரபி படிப்பில் சேர இடம் கிடைத்தது. அரசு வைக்கும் கவுன்சிலிங் மூலமாகவே மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். கல்லூரியில் சேர்ந்து 3 வருடங்கள், கிட்டதட்ட பாதி படிப்பு முடிந்திருந்தது. அந்த செமஸ்டரில் செய்முறை தேர்வுக்காக அரசு பிசியோதெரபி கல்லூரிக்கு சென்றிருந்தேன். அங்கே விதி தன் விளையாட்டை ஆரம்பித்தது. நான் கல்லூரியிலும் வகுப்பிலும் வீல் சேரில்தான் செல்வேன், இருபேன், அப்படியே செய்முறை தேர்வுக்கும் அப்படியே சென்றேன். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். செய்முறை தேர்வை செய்தேன். ஆனால் அங்கே இருந்த எக்ஸாமினர்களின் பார்வை: இவன் ஒரு கால் ஊனமுற்றவன் எப்படி பிசியோதெரபி படிக்கிறான் என ஆச்சரியப்பட்டார்கள். அது வெறும் ஆச்சரியமல்ல என்று பின்னால் தெரிந்தது. நான் நன்றாக செய்முறை தேர்வு செய்தும் என்னை ஃபெயில் செய்தார்கள். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை, இவன் பிசியோதெரபியில் படிக்க தகுதியானவன் அல்ல இவன் எப்படி இந்த படிப்பில் சேரலாம் என அவர்கள் மருத்துவ பல்கலைகழகத்திற்கு எழுதி போட்டனர். செய்முறை தேர்வில்லாமல் எல்லா தேர்வுகளிலும் என்னை பெயில் செய்தனர். கவர்மெண்ட்டின் கவுன்சிலிங் மூலம் படிப்பில் சேர்த்த என்னை முக்கால்வாசி படிப்பு முடிந்த பிறகு அவர்களே படிக்க தகுதியில்லை என நீக்கி விட்டனர். பல்கலைகழகம், கவுன்சலிங் செய்யுமிடம், கல்லூரி என மாறி மாறி பல இடங்களுக்கு பல முறை நானும் என் பெற்றோர்களும் அலைந்தோம் ஒன்றும் பலனில்லை. ஆசையாய் படித்த படிப்பு ஒன்றுமில்லாமல் போனது. அலைந்தோம் நானும் என் பெற்றோர்களும். கேஸ் போடலாம் என்றனர். அப்போதிருந்த எங்கள் குடும்ப சூழ்நிலை அதை செய்ய எங்களால் இயலவில்லை. என்ன செய்தாலும் போன படிப்பு போனதுதானே. நானும் என் பெற்றோர்களும் பட்ட கஷ்டம் வீண்தானே. முழுதாக 3 வருடம் வீண்!!!  


வாழ்க்கையில் அந்த சம்பவத்திற்கு பிறகு மிகவும் மனமுடைந்து போனேன் சிறுவயதிலிருந்து என் ஊனத்தை நான் குறையாக நினைக்காத வகையில் என் பெற்றோர்கள் என்னை வளர்த்திருந்தனார். ஆனால் நான் மிகவும் ஆசைப்பட்ட படிப்பு, என் ஊனத்தை காரணம் காட்டியே மறுக்கப்பட்ட போது மனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொஞ்ச நாள் பயங்கர விரக்தியில் இருந்தேன், தற்கொலை எண்ணம் கூட வந்தது. ஆனால் என் பெற்றோர் தந்த அன்பு என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. பிறகு அஞ்சல் வழியில் சைக்காலஜி சேர்ந்தேன் முடித்தேன். நடுவில் கணிப்பொறியில் வேலை செய்ய ஆரம்பித்தேன். இதோ இன்று வலையுலகில் இத்தனை நண்பர்கள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள்!!

யோசித்து பாருங்கள் ஒரு மாணவனின் படிப்பு வீணாகும் என்று யோசிக்கவில்லை. அத்தனை வருட உழைப்பு வீணாகும் என்று யோசிக்கவில்லை. அவர்களே என்னை சோதித்து எல்லா சான்றிதழ்களையும் சரிபார்த்து(அதற்குதானே கவுன்சிலிங் என்று ஒன்று!) பிறகே என்னை தேர்ந்தெடுத்தார்கள். பிறகு தாங்கள் செய்தது தவறென்று கூட சொல்லவில்லை, ஆனால் நான் சேர்ந்தது தவறென்று என்னை ஒதுக்கி விட்டார்கள். ஒரு மருத்துவ கல்விக்கே இந்நிலை என்றால் மற்ற பாடங்களுக்கு??

இக்கல்வி முறை வெறும் வியாபாரம் நடைபெறும் இடமாகவே இருக்கின்றது. அதிகாரம் இங்கே உறுதியாக இல்லை. கல்வியை முடித்து கையில் பட்டமெனும் காகிதங்களை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே வாழ்க்கையில் முன்னேற முடியாது. Survival of the fittest என்றபடி முட்டி மோதி வாழ்க்கையில் எழுபவர்கள் மட்டுமே முன்னேறுகிறார்கள். பலர் வெறும் பட்டத்தை பேரின் பின்னால் சுமந்து கொண்டு தெரியாத எதிர்காலத்தை எண்ணி புரியாமல் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள்.

இங்கே நான் என் அனுபவம் சார்ந்தே எழுதி இருக்கிறேன் இதனை தொடர்பதிவாக விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்!

67 comments:

  1. நல்ல அலசல் நண்பரே...

    எஸ் கே உங்களுக்கு நானுன் ஒரு நண்பன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது.....

    என்னை பொறுத்தவரை படிப்பு என்பது ஒரு விசயமே இல்லை... கொஞ்சம் படித்த காரனத்தினாலையே ஊர் ஊராகும், நாடு விட்டும் சொந்தம் பந்தம் என அனைவரையும் விட்டு விலகி இருக்கிறேன்.. ஆனால் என்னுடன் பத்தாம் வகுப்புவரை பயின்ற பல நண்பர்கள் அதோடு படிப்பை நிறுத்திவிட்டு அவர்களுக்கென்று ஒரு துறையை தேர்வு செய்து அதிலையே முழு கவனமும் செலுத்தி இன்று தனியாக நிறுவனங்களை துவங்கி ஊரிலையே குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கின்றனர்.. சொல்லப்போனால் இங்கே நான் வாங்கும் சம்பளத்தை விட அவர்கள் அதிகமாகத்தான் சம்பாதிக்கிறார்கள். இவற்றை பார்க்கும் போது நான் படித்த படிப்பு அவசியமில்லாதது என்று தான் தோன்றுகிறது....

    ReplyDelete
  2. உண்மை தான் கல்வி இங்கு வியாபாரம் ஆகிவிட்டது..மதிப்பெண்களை மட்டும் பெறும் நோக்கில் வெறும் மனன கல்வி தான் இங்கு இருக்கிறது..மூன்று வருட படிப்பும் உழைப்பும் வீணாக்கப்படும் போது உங்கள் மனதின் வலியை எண்ணால் உணர முடிகிறது..கல்விமுறை மாறவேண்டும்..

    நல்ல பகிர்வு..நன்றி...

    ReplyDelete
  3. //சிறுவர்களின் மூளை களிமண் போன்றது///

    இம்சை பாபுவுக்கு ஏழு கழுதை வயசாகியும் இன்னும் மூளைக்கு பதில் களிமண்ணுதான இருக்கு. எனி பிராப்ளம்?

    but, நல்ல உருப்படியான பதிவு...

    ReplyDelete
  4. //கலாநேசன் said...//
    மிக்க நன்றிங்க!

    //வெறும்பய said...//
    ரொம்ப நன்றி நண்பரே!

    படிப்பு வெறும் சான்றிதழ்களாக மட்டுமே கையில் உள்ளது! ஆனால் நம் எதிர்காலம் அதையும் தாண்டி பல விஷயங்களை சார்ந்துள்ளது!

    //ஹரிஸ் said...//
    மிக்க நன்றிங்க!

    // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  5. மாணவர்கள் தோல்வி அடைய காரணம் அதிக அளவு பாடச் சுமையே. 10 வகுப்பு வரை ஓரளவிற்கு ஈஸியான பாடத்திட்டம் பின்னர் 11 & 12 கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்திச்சு.

    ReplyDelete
  6. மிகவும் நல்ல பதிவு... "அனுபவங்கள் மூலம் நாம் கற்க்கும் பாடம் எம்மை நேர் வழியில் வாழவைக்கும்'

    ReplyDelete
  7. நண்பா இப்போது கூட தகுந்த இலவச சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள். முயற்சிக்கலாம்.

    படுபாவிங்க........

    அடுத்த மூணு தலைமுறை அவனுங்க குழந்தைகளுக்கும் இந்த பாவம் போய் சேரட்டும்.

    ReplyDelete
  8. சிறுவர்களின் மூளை களிமண் போன்றது அதை நாம் முறையாக கையாண்டால் எளிதாக நல்லவற்றை பதிய வைக்கலாம்

    True

    ReplyDelete
  9. @எஸ்.கே

    நல்ல எழுதி இருக்கிங்க எஸ்.கே... அருமை.

    ReplyDelete
  10. //சமகால கல்வி - Survival of the fittest //

    விரிவான பார்வை...
    தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அருமை சார்,

    //இக்கல்வி முறை வெறும் வியாபாரம் நடைபெறும் இடமாகவே இருக்கின்றது. அதிகாரம் இங்கே உறுதியாக இல்லை. கல்வியை முடித்து கையில் பட்டமெனும் காகிதங்களை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே வாழ்க்கையில் முன்னேற முடியாது. Survival of the fittest என்றபடி முட்டி மோதி வாழ்க்கையில் எழுபவர்கள் மட்டுமே முன்னேறுகிறார்கள். பலர் வெறும் பட்டத்தை பேரின் பின்னால் சுமந்து கொண்டு தெரியாத எதிர்காலத்தை எண்ணி புரியாமல் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள்.//

    இன்று முற்றிலும் கல்வி வியாபாரம் ஆகிப்போனதுதான் மிகவும் வேதனையாக உள்ளது

    ReplyDelete
  11. @எஸ்.கே

    ஓட்டு பட்டன் எங்க?? அடுத்த முறை நான் இங்க வருகின்றபோது ஓட்டு பட்டை இல்லா..... கிர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  12. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  13. //வெறும்பய said...
    நல்ல அலசல் நண்பரே...
    எஸ் கே உங்களுக்கு நானுன் ஒரு நண்பன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது.....

    என்னை பொறுத்தவரை படிப்பு என்பது ஒரு விசயமே இல்லை... கொஞ்சம் படித்த காரனத்தினாலையே ஊர் ஊராகும், நாடு விட்டும் சொந்தம் பந்தம் என அனைவரையும் விட்டு விலகி இருக்கிறேன்.. ஆனால் என்னுடன் பத்தாம் வகுப்புவரை பயின்ற பல நண்பர்கள் அதோடு படிப்பை நிறுத்திவிட்டு அவர்களுக்கென்று ஒரு துறையை தேர்வு செய்து அதிலையே முழு கவனமும் செலுத்தி இன்று தனியாக நிறுவனங்களை துவங்கி ஊரிலையே குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கின்றனர்.. சொல்லப்போனால் இங்கே நான் வாங்கும் சம்பளத்தை விட அவர்கள் அதிகமாகத்தான் சம்பாதிக்கிறார்கள். இவற்றை பார்க்கும் போது நான் படித்த படிப்பு அவசியமில்லாதது என்று தான் தோன்றுகிறது....//

    சில நேரங்களில் நாம் அப்படி நினைக்கத் தோன்றினாலும்

    “எதை வேண்டுமானாலும் செய் முயலு முடி...
    ஆனால் உனக்கு சோறு போடும் உன்கல்வி மற்றும் வேலையை மட்டும் மறந்துவிடாதே...
    அதில் முன்னேற வாய்ப்புகள் உண்டாவென என்று பார்த்துக்கொண்டேயிரு! ஏனெனில் அதனால்தான் நீ இவ்வளவு தூரமும் வந்திருக்கின்றாய்!”

    என்ற வரிகள் நம்மை ஏதோ செய்கிறது...

    தவறாக நினைக்க வேண்டாம் இது எனது கருத்து

    ReplyDelete
  14. நிதர்சன உண்மைகள் கொண்ட ஆக்கப்பூர்வ கட்டுரை எஸ்.கே.

    இயல்பான இது போன்ற விசயங்கள் பற்றிய அலசல்களும்...விவாதங்கள்லும் அறிவுசார் சிந்திக்கும் திறன் உள்ள ஒரு சமுதாயத்தை சமைக்கும்.....!

    பாராட்டுக்கள்...தொடர்ந்து நிறைய பேர் எழுதினால் நல்லது..! யாருக்கு நல்லது...? நம்ம புள்ளை குட்டிங்களுக்குத்தான்....யாருக்கோன்னுதான் தோணும்....ஆனால்...

    விதைக்கும் விதைப்பில் கவனமாயிருந்தால் விளையும் பயிர் என்ன மோசமா செய்துவிடும்...!

    ஆரோக்கியமான கட்டுரைகளையும் விவாதங்களையும் முன்னெடுப்போம்...வலைப்பூக்களை.. கருத்துக்களின் கலமாகவும்...மனிதர்களின் அறிவுக்கு உரமாகவும் மாற்றுவோம்....!!!!!!

    குழுவாய் அமர்ந்து கும்மியடித்து வாக்குகள் இட்டு...கருத்துரைகள் ஒரு மொய்பெய்யும் விழாவாய் நிகழ்த்தாமல்....நல்ல கட்டுரைகளை ஆதரிப்போம் ...நல்ல கட்டுரைகளை செய்வோம்...!

    வாழ்த்துக்கள் எஸ்.கே!

    ReplyDelete
  15. நல்ல அனுபவ தகவல்கள்

    ReplyDelete
  16. நானும் உங்கள மாதிரிதான் MCA படிச்சுட்டு 2 வருஷம் IT - ல இருந்து
    communication problem காரணமா நிரந்தரமில்லா வேலைல அலகளிக்கபட்டு வாழ்க்கைய வெருத்து
    இப்ப அக்கௌன்ட்டண்டா bahrain-ல . ஆசைப்பட்டு படிச்சது ஒன்னு பாக்கற வேல ஒன்னு 6 வருஷம் என்னோட கனவு எங்கப்பாவோட உழைப்பு எல்லாம் போச்சு. கனவா கடனான்னு பாக்கும் போது எனக்கு கடன் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது.

    ReplyDelete
  17. //இரவு முழுதும்/விடுமுறை நாட்களில் கூட ஸ்பெஷல் கிளாஸ் நடத்தப்படுகின்றன. இது மாணவர்களின் மனம் மற்றும் உடல்நிலை இரண்டையுமே பாதிக்கும். மேலும் படிப்பின் மீது ஒரு வெறுப்பு கூட ஏற்படலாம்//

    இது உண்மை மக்கா ............இங்க பல கலோரிகள் அப்படி தான்...நடகிட்றன .............

    மொத்தத்தில் அருமையான பதிவு .டெர்ரர் கூறியதை நான் வழி மொழிகிறேன் .ஒட்டு பட்டை வைங்க எஸ் .கே (ஏற்கனவே பல முறை உங்களிடம் கூறி இருக்கிறேன் .இப்பொழுது துணைக்கு ஒரு ஆள் கிடைத்திருக்கிறது.அதனால் இன்னும் உரத்த குரலில் கூறுகிறேன் ......ஒட்டு பட்டை வைங்க )

    ReplyDelete
  18. //இம்சை பாபுவுக்கு ஏழு கழுதை வயசாகியும் இன்னும் மூளைக்கு பதில் களிமண்ணுதான இருக்கு. எனி பிராப்ளம்//
    எலேய் நல்ல பதிவுக்கு கும்மி வேண்டாம் ன்னு நினைக்கிறன் ..........இல்லை நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேட்ப்பேன்

    ReplyDelete
  19. நேத்து இருந்து நான் இதை பத்தி
    தான் யோசிச்சிட்டு இருந்தேன்..

    அருமையா எழுதி இருக்கீங்க..
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. // சில பள்ளிகள் தங்கள் பள்ளியின் மதிப்பை உயர்த்தவும்,
    தேர்ச்சியடைபவர்களின் எண்ணிக்கை உயர்த்தவும்,
    பிள்ளைகளை படி படி என்றும் கடுமையாக தொந்தரவு
    செய்யும் நிலையும் உள்ளது. //

    100% உண்மை..

    Want Proof...??!!

    Click Here

    ReplyDelete
  21. சரியாக சொன்னிங்க எல்லாம் வியாபாரம் ஆகி விட்டது
    உங்களை கவுன்சிலிங் மூலம் தேர்ந்த்து எடுத்து விட்டு பிறகு ஏன் சொல்கிறார்கள் எல்லாம் பணம் தான் காரணம். பிசியோதெரபி படிப்பு மிகவும் கடினமானது ஒரு செமஸ்டர் தேர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் அதே ஆண்டு படிக்க வேண்டும் நீங்கள் அதை எல்லாம் கடந்து மூன்று ஆண்டுகள் நன்றாக படித்து உள்ளீர்கள் அதை கூட யோசிக்காமல் செய்வது வேதனை..நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. அண்ணே இன்றைய கல்வியின்
    நிலையை
    நல்ல எழுதி இருக்கீங்க
    மனமார்ந்த பாராட்டுக்கள் .
    வாழ்த்த வயதில்லை
    வணக்கங்கள்

    ReplyDelete
  23. //vanathy said...//
    தாங்கள் சொல்வது உண்மைதான்! பாடச்சுமையுடன் மாணவர்களை பொதுத் தேர்வுக்காக கடுமையாக படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் ஒரு காரணமாகும்.

    //பிரஷா said...//
    "அனுபவங்கள் மூலம் நாம் கற்க்கும் பாடம் எம்மை நேர் வழியில் வாழவைக்கும்” நிதர்சனமான உண்மை!

    //ஜோதிஜி said...//
    முயற்சிக்கலாம்தான்! ஆனால் இப்போது அந்த மனநிலையில் இல்லை!
    அவர்கள் பிள்ளைகளாவது நன்றாக இருக்கட்டும் சார்!

    //யாதவன் said...//
    மிக்க நன்றிங்க!

    //TERROR-PANDIYAN(VAS) said...//
    மிக்க நன்றி! ஓட்டுப் பட்டை அவசியமா?

    //மாணவன் said...//
    உண்மைதான் நண்பரே, கல்வி வியாபாரத்தில் மாணவர்கள் பகடை காய்களாய் மாறி விட்டார்கள்!

    //எப்பூடி.. said...//
    மிக்க நன்றிங்க!

    //மாணவன்//
    தங்கள் கருத்தில் தவறில்லை நண்பரே! உண்மையாகவே கற்ற கல்வி, சோறுபோடும் வேலையை என்றும் மறக்க கூடாதுதான். ஆனால் இந்த கல்வி முறை தக்க பலனளிப்பதில்லை என்பதைதான் இங்கே சொல்லப்படுகிறது.

    //dheva said...//
    உங்களுக்கு மிகப் பெரிய நன்றி! இது போன்ற ஆரோக்கியமான கட்டுரைகளை ஊக்குவிப்பதற்கும் ஆள் வேண்டும். இனி பலரும் நல்ல ஆக்க பூர்வ கட்டுரை அவ்வப்போது எழுதுவார்கள் என நம்புவோம்!

    //KANA VARO said...//
    மிக்க நன்றிங்க!

    /ராஜகோபால் said...//
    பலரின் வாழ்க்கை இப்படித்தான் படித்தது ஒன்று, செய்வது ஒன்றென ஆகிவிடுகிறது. ஆசைகளும் லட்சியங்களும் நிறைவேறாது கண் முன்னே குடும்பச் சுமை மட்டுமே தெரிவதால்...

    //இம்சைஅரசன் பாபு.. said...//
    உண்மைதாங்க பள்ளிகளிலும் இப்படி நடக்கிறது!

    ஓட்டுப்பட்டை அவசியமா சொல்லுங்க!

    //வெங்கட் said...//
    இந்த பதிவை எழுதி முடித்த பின் உங்கள் பதிவை பார்த்தேன்! நான் எழுதியது பல இடங்களில் நடக்கிறது என புரிந்துகொண்டேன். இளஞ்சிறார்களும் துன்பப்படுவது மிகவும் வேதனைக்குரியது!

    //சௌந்தர் said...//
    மிக்க நன்றி நண்பா!

    //siva//
    ரொம்ப நன்றிங்க!
    (உங்க பிளாக் பேரே ரொம்ப நல்லா இருக்கு! )

    ReplyDelete
  24. மிகவும் அவசியமான பகிர்வு.
    தற்போதைய பாட நெறிகளில் , நிய வாழ்க்கையை பிரதிபலிக்க கூட்டிய பல மாற்றங்கள் தேவைபடுகிறது.

    ReplyDelete
  25. உங்கள் தன்னம்பிக்கை எங்களுக்கு இன்று டானிக்காக இருக்கிறது

    ReplyDelete
  26. கல்வி இங்கு வியாபாரம் ஆக்க பட்டுவிட்டதை அழகாக சொல்லி உள்ளீர்கள் சார்

    ReplyDelete
  27. பட்டய கெலபீடீங்க.... நல்ல பகிர்வு

    ReplyDelete
  28. நல்ல அலசல். ஒவ்வொரு ஆசிரியரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு. பெற்றோரும் கூடத்தான்.
    இது பற்றி நானும் எழுத இருக்கிறேன்.

    ReplyDelete
  29. இங்குள்ள கல்வி முறை சரியில்லை என்ற உங்கள் கருத்து நூறு சதவிகிதம் உண்மை நண்பரே.
    அதிலும் இப்போது உள்ள ஆசிரியர்களில் பெரும்பாலானோர் சிறிதும் அர்ப்பணிப்பு இல்லாமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறார்கள்.

    உங்களுக்கு எப்படி சமாதானம் கூறுவது என்று எனக்கு தெரியவில்லை நண்பரே...

    ReplyDelete
  30. கல்விமுறையில் இந்த அளவுக்கு சீரழிவு ஏற்பட்டதுக்கு ஆட்சியாளர்களே மிக முக்கிய காரணம். கல்வி என்பதை சேவை (service) என நினைக்காமல் வியாபாரமாக (business) மாற்றியதே ஆட்சியாளர்கள் தான். மாற்றத்தை முதலில் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதில் இருந்து ஆரம்பிப்போம்.

    ReplyDelete
  31. //எத்தனை பேருக்கு துறை சார்ந்த அறிவு போதுமான அளவு இருக்கின்றது? கல்லூரியில் தானாக ஆர்வம் எடுத்து படிப்பவர்கள் மட்டுமே சமாளித்து வெளிவர முடிகிறது. கல்லூரி முடித்து வெளிவரும் பலரிடமும் சான்றிதழ்கள் மட்டுமே உள்ளன, ஆனால் Knowledge?//

    துறை சார்ந்த அறிவு மட்டுமின்றி பொது அறிவும் இல்லை. மக்கள் டிவியில் வரும் கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டையில் பொதுமக்கள் அதுவும் படித்தவர்கள் கூட கூறும் பதில்களை கேட்டால் சிரிப்பதா (அ)வேதனைப்படுவதா என்று புரியவில்லை.அது காமெடி நிகழ்ச்சி என்பதால் பாரவயில்லை... நன்றி நண்பரே.

    ReplyDelete
  32. //ஜோதிஜி said...
    நண்பா இப்போது கூட தகுந்த இலவச சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள். முயற்சிக்கலாம்.//

    வேலைக்கு ஆகும் என்று நினைக்கீர்கள்!!!.....

    //எஸ்.கே said...அவர்கள் பிள்ளைகளாவது நன்றாக இருக்கட்டும் சார்!//

    நல்லவர்களை தான் கடவுள் அதிகமாக சோதிப்பார்...ஆனால்....

    ReplyDelete
  33. இது ரொம்ப அநியாயம் :( கொஞ்சமாவது மனசாட்சி உள்ளவர்கள் பதவிகளுக்கு வந்தால் பரவாயில்லை (இல்ல வந்த பிறகு அப்படி ஆகிவிடுகிறார்களா?).

    இத்தனையும் கடந்து ஜெயித்த உங்களுக்கு பாராட்டுக்கள் :)

    ReplyDelete
  34. //அரசு கல்வித் துறையை தன் கட்டுப்பாட்டில் ஒழுங்காக வைத்து முறையாக செயல்படுத்துமானால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டணங்கள் அதிகமென்ற பேச்சே வராது! //

    அன்று --
    கல்விக் கூடங்கள், அரசின் வசம்
    ஒயின்ஷாப், தனியார் வசம்.

    இன்று ?
    நன்றாக சொல்லப் பட்ட நல்ல கருத்துக்கள்.
    உங்களின் தன்னம்பிக்கை என்னை மிகவும் கவர்ந்தது.
    நீங்கள் மெம்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

    உங்கள் அறிவுத் திறன், நீங்கள் எழுதிவரும்
    கணணி மென்பொருள் 'போட்டோ பிளாஷ்', 'கனவு' தொடர்கள் மூலம் தெரிகிறது.

    ReplyDelete
  35. இதுவும் ஒரு சிறந்த பதிவு
    வாழ்த்துக்கள் நண்பன்

    ReplyDelete
  36. //nis said...//
    மிக்க நன்றி!

    // ஆர்.கே.சதீஷ்குமார் said...//
    ரொம்ப நன்றிங்க!

    //நா.மணிவண்ணன் said...//
    ரொம்ப நன்றிங்க!

    //Arun Prasath said...//
    மிக்க நன்றிங்க!

    // பெயர் சொல்ல விருப்பமில்லை said...//
    மிக்க நன்றி! எழுதுங்கள் காத்திருக்கிறேன்!

    //Thomas Ruban said...//
    மிக்க நன்றி நண்பரே ஆதரவிற்கு அன்பிற்கும்!

    // நாகராஜசோழன் MA said...//
    உண்மைதான் நல்ல ஆட்சியாளர்கள்தான் இதை முழுமையாக மாற்ற முடியும்!

    //Prasanna said...//
    மிக்க நன்றிங்க!

    //Madhavan Srinivasagopalan said...//
    மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் சார்!

    //மகாதேவன்-V.K said...//
    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  37. மிகவும் தெளிவாக இன்றைய கல்வியின் நிலையை எடுத்து உரைத்து இருக்கிறீர்கள்.....உங்களின் ஆதங்கம் தான் என் கருத்தும்.....

    பிள்ளைகள் இஷ்டப்பட்டு படிக்கணும்...கஷ்டப்பட்டு இல்லை. நிறைய புரிதல்கள் பெற்றோரிடமும், ஆசிரியர்களிடம் வர வேண்டும்.

    இந்த பதிவு மிக சிறந்த பதிவு...மற்றவர்களும் தங்களது கருத்துக்களை பதிவாக எழுதவேண்டும்...நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் இதன் மூலம்....!

    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. //கல்லூரி முடித்து வெளிவரும் பலரிடமும் சான்றிதழ்கள் மட்டுமே உள்ளன, ஆனால் Knowledge?//
    உண்மையான உலக அறிவை வெளியே வந்த பின் தான் கற்க வேண்டியிருக்கிறது. அதற்குள் வாழ்க்கையின் பெரும் பகுதி ஓடி விடுகிறது.
    கல்வி பற்றிய பதிவு, வரவேற்க்கத்தக்க நல்ல முயற்சி.

    ReplyDelete
  39. //இன்று பள்ளியில் படிக்கும் பலருக்கும் தங்கள் தாய்மொழியே சரியாக தெரிவதில்லை. தமிழ் எழுத்துக்கள் எத்தனை என்று தெரியாதவர்களும் இங்கே இருக்கிறார்கள். உச்சரிப்பு என்பது மிக மோசமாக உள்ளது.//

    மிகவும் சரி.

    ReplyDelete
  40. தெளிந்த ஆய்வு; பாராட்டுக்கள்.
    'வல்லவன் வாழ்வான்' என்பது இன்றைக்கு நேற்றல்ல - தொன்று தொட்டே விளங்கியது தானே? 'எதிர்கால வாழ்க்கைக்கு வழி காட்ட வேண்டியது கல்வி' என்ற எதிர்பார்ப்பில் தான் கோளாறு இருக்கிறது என்பது என் கருத்து.

    உங்கள் ஆய்வும் இந்தியாவைத் தொட்டே இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் கல்வி முறை மற்றும் தரத்தில் குறை நிறை காண முடியும். என் பாட்டனார், என் பெற்றோர் மற்றும் என் தலைமுறைகளை விட இன்றைய பள்ளிப்பிள்ளைகள் தன்னம்பிக்கை, பொது அறிவு, எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கறிந்தவர்களாக இருப்பதைக் கவனிக்கிறேன். உலகறிவு என்பது கலாசாலையில் கிடைப்பதில்லை; பட்டறிவே உலகறிவு அல்லவா? அதை வைத்து கல்வித்தரம் குறைந்தது என்று சொல்ல முடியவில்லை.

    ReplyDelete
  41. என்ன சொல்றததுன்னே தெரியலங்க சுரேஷ்.
    அற்புதமான ஒரு கட்டுரை.
    வாழ்த்துக்கள்.
    இதில் ஜெயந்த், நாகராஜசோழன் மற்றும் கௌசல்யா அவர்களது பின்னூட்டங்களை ஒன்றாக இணைச்சுக்கோங்க.

    ReplyDelete
  42. //அடுத்த மூணு தலைமுறை அவனுங்க குழந்தைகளுக்கும் இந்த பாவம் போய் சேரட்டும்//

    என்னோட சாபமும்...

    ReplyDelete
  43. நல்ல தெளிவான அனுபவ விளக்கம்... ஒரு நிமிடம் கூட எதிராளியின் மனதை வாசிக்க தெரியாத முட்டாள் படிப்பாளிகளின் ராஜ்ஜியம்... கேட்டால் நேர்மை, நியாயம் என்று ஜல்லி அடிப்பார்கள்... இனி நாம் அடிக்கவேண்டியதுதான் ஜல்லியாலே :)

    ReplyDelete
  44. நானும் ஒரு கல்லூரி விரிவுரையாளன் என்றாலும்... இத்தகைய மனிதர்களை கண்டு வருந்துகிறேன்.

    ReplyDelete
  45. அருமை அண்ணா ., சொல்ல வார்த்தைகள் இல்லை ..!!

    ReplyDelete
  46. அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. மிகவும் அருமையான பதிவு..

    மிகுந்த தன்னம்பிக்கையைக் கொண்ட தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  48. விழிப்புணர்வுமிக்க கட்டுரைத் தொகுப்பு.
    பகிர்வுக்கு நன்றி எஸ்.கே.

    ReplyDelete
  49. //Kousalya said...//
    உண்மைங்க! பெற்றோர் ஆசிரியர்களிடம் நிறைய புரிதல்கள் வர வேண்டும்! தாங்களும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

    //பாரத்... பாரதி... said...//
    உண்மைதான் கற்கும் கல்வி உலக அறிவை தருவதில்லை!

    //Geetha6 said...//
    நன்றிங்க!

    //அன்பரசன் said...//
    மிக்க நன்றிங்க!

    //அப்பாதுரை said...//
    இந்த கட்டுரை பெரும்பாலும் இந்தியாவை வைத்தே எழுதப்பட்டதுதான்! ஆனால் நீங்கள் சொன்னபடி எல்லா நாட்டிலும் குறை நிறை காண முடியும்தான்!
    தலைமுறை தாண்டும்பொழுது அறிவு அதிகமாக உள்ளது என்பதை ஒத்துகொள்கிறேன். ஆனால் கல்வித் தரம் குறைந்தது என்பதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கே கல்வியை தரமாக அளிக்க கூடியா வாய்ப்புகள் தாராளமாகவே உள்ளன, ஆனால் அது முழுமையாக கிடைப்பதில்லை!

    //அன்பரசன் said...//
    மிக்க நன்றிங்க! உண்மைதான் அவர்கள் சொல்வது மிகவும் ஏற்றுக்கொள்ள கூடியவைகள்!

    //கே.ஆர்.பி.செந்தில் said...//
    சாபம் எதற்குங்க! அவங்க குடும்பமாகவது நல்லா இருக்கட்டும்!
    வருகைக்கு நன்றிங்க!

    //அலைகள் பாலா said...//
    மிக்க நன்றிங்க!

    //Sugumarje said...//
    மிக்க நன்றிங்க! எல்லா விதமான மனிதர்களையும் நாம் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. விளைவுகள் மோசமாக இருக்கின்றபோதே நமக்கு பிரச்சினைகளாக போகின்றது!

    //ப.செல்வக்குமார் said...//
    மிக்க நன்றி செல்வா!

    //சசிகுமார் said...//
    மிக்க நன்றிங்க!

    //பதிவுலகில் பாபு said...//
    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  50. //பிரவின்குமார்//
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  51. அருமை நண்பா...

    ReplyDelete
  52. //padaipali said... //
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  53. வெளிநாட்டுப் படிப்புமுறைகளைப் பார்க்கும்போது நம்ம நாட்டு படிப்புமுறைகள் பாட்டும் பயனுமாய் எதுக்கும் உதவாதவைகளே !

    ReplyDelete
  54. அருமையான கருத்து.கலக்கிடீங்க நண்பரே!

    ReplyDelete
  55. அருமையா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  56. சிறப்பான,நேர்மையான உங்கள் கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  57. படிக்க ஆரம்பிக்கும் போது இவ்வளவு பெரிய பதிவா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டு சலிப்புடன்தான் ஆரம்பிச்சேன் நண்பரே... அப்புறம்.. அதில் இருந்த கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதாக இருந்ததால் தொடர்ந்து படித்தேன்... நல்ல அலசல் நண்பரே...

    இந்த கட்டுரையைத் தொடர்வதற்கான காரணத்தை நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் படித்தவுடன்.. நமது கல்வி முறை மீது மீண்டும் ஒரு முறை கோபம் வந்தது... அடுத்தவர் உழைப்பும், காசும், மனசும்.. இவனுங்களுக்கெல்லாம்.. அவ்வளவு விளையாட்டா போயிடுச்சு....

    ReplyDelete
  58. //ஹேமா said...//
    மிக்க நன்றிங்க! நம் நாட்டில் சிறப்பான கல்வியளிக்க வசதிகள் இருந்தும் தராததுதான் வேதனை!

    //padaipali said...//
    நன்றி நண்பரே!

    // Kanchana Radhakrishnan said...//
    மிக்க நன்றிங்க!

    // pragathi said...//
    மிக்க நன்றிங்க!


    //பிரியமுடன் ரமேஷ் said.//
    வாழ்க்கையில் இப்படிப்பட்ட தருணங்களையும் சந்திக்கத்தான் வேண்டியுள்ளது! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  59. அன்புள்ள திரு எஸ்.கே அவர்களுக்கு தடை தாண்டிய தங்கள் பயணம்,தங்களுக்கு மேலும் வலிவையும் ஆற்றலையும் கொடுக்கும்.தங்களின் மன வலி,இழந்த பொன்னான காலம் என்னை வருத்துகிறது.இந்தக் கல்வி முறையில் மீண்டு எப்படியும் ஒரு ஏற்றமுறு, சமுதாயம் அமைப்போம் என்ற நம்பிக்கையுடன் ..வெற்றிக்கு வேண்டும் விடா முயற்சி ..அது உங்களிடம் உள்ளது ..செயல் படுங்கள் ...என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  60. நண்பரே... மறுபடி எனது கனவு ஒன்றினை பற்றி எழுதியிருக்கிறேன்... விரைவாக வந்து விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்...

    http://philosophyprabhakaran.blogspot.com/2010/12/blog-post_03.html

    ReplyDelete
  61. அவசியமான பதிவு

    தகவல் உலகம் - விருதுகள்
    http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html

    ReplyDelete
  62. தகுந்தக் குறிப்புகளுடன் மிகவும் தெளிவான முறையில் எழுதி இருக்கும் ஒரு சிறந்தப் பதிவு இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சமக கல்வி சார்ந்த ஒரு தெளிவான சிந்தனை உதிக்கும் என்பது மட்டும் திண்ணம் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  63. சம காலக்கல்வி பற்றிய எங்கள் பதிவுhttp://bharathbharathi.blogspot.com/2010/12/blog-post_15.html

    பார்வையிட உங்களை அன்புடன் அழைக்கிறோம்..

    ReplyDelete
  64. அண்ணா, இப்பெல்லாம் கல்வி நிறுவனங்கள் வைத்திருப்பவன் தான் கோடி கோடியாகக் கொள்ளையடிக்கிறான்.

    அரசு விகித்த கட்டணம் தான் வாங்கவேண்டும் என்ற தீர்ப்புக்குப் பிறகும், எனது தம்பியின் பள்ளியில் அதிகக் கட்டணம் கட்டச் சொல்லி வற்புறுத்தினர். செய்முறை தேர்வில் கைவைத்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு. கடைசியில் பெற்றோர்கள் அனைவரது ஒற்றுமையின் காரணமாக, கூடுதல் தொகை தவிர்க்கப் பட்டது.

    இதில் கவலைக்குறிய விஷயம் என்னவெனில், ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களைக் கூடுதல் கட்டணம் கட்டச் சொல்லிக் கெஞ்சியது தான் உச்சக்கட்டம்! தங்களுக்குச் சம்பளம் குறைந்துவிடும் என்றும், மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள் என்றும் Emotional Threatening வேறு.

    ஆசிரியர்கள் இப்படி இருந்தால், மாணவர்கள் வருங்காலத்தில் எவ்வாறு வளர்வர்??

    மேலும் தாங்கள் கூறிய அனுபவம் கேட்டு மனது வலித்தது அண்ணா!!!

    இக்காலக் கல்வி பற்றிச் சிறிதாக ஒரு கவிதை எழுதினேன்.

    லின்க்: http://idlyvadai.blogspot.com/2010/11/blog-post_06.html

    ReplyDelete